Tuesday, March 4, 2014

பண்ணாரி விழா

 கோலாகலமாக துவங்கியது பண்ணாரியம்மன் கோயில் விழா


 
  












புகைப்படங்கள்: எஸ்.ஜி.ராமலிங்கம்
 
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அருள்மிகு பண்ணாரியம்மன் கோயில் விழா திருப்பூச்சாட்டுதலுடன் திங்கள்கிழமை இரவு கோலாகலமாக துவங்கியது.
தமிழக காநாடகத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பண்ணாரியம்மன் கோயில் விழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும். இந்த விழாவில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று தீ மிதிப்பர். 
இந்தாண்டுக்கான விழா திங்கள்கிழமை இரவு மலைவாழ்மக்களின் பீனாட்சி வாத்தியத்துடன்  தாரைதப்பட்டை வாத்தியங்கள் முழங்க திருப்பூச்சாட்டுதலுடன்  துவங்கியது. விழாவையொட்டி,  பண்ணாரி தெப்பகுளத்தில் அமைந்துள்ள சருகு மாரியம்மன் மற்றும் மதேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, சிக்கரசம்பாளையம், வெள்ளியம்பாளையம் மற்றும் இக்கரைத் தத்தப்பள்ளி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த கிராமமக்கள்  கோயிலில் விழா  நடத்த அம்மனிடம் பூவரம் கேட்டனர். 
அம்மனிடம் இருந்து வரம் கிடைத்ததும் சுமாமிக்கு சிறப்புபூஜைகள் செய்து விழாவுக்கான ஏற்பாடுகளை செய்ய துவங்கினர். இந்நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர், பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் சிக்கரசம்பாளையம், இக்கரைநெகமமன்புதூர், தத்தப்பள்ளி, வடவள்ளி, குய்யனூர் உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். 
விழாவையொட்டி, பண்ணாரிஅம்மன் பல்வேறு கிராமங்களில் வெள்ளி சப்பரத்தில்  திருவீதியுலா வந்து சென்றால் மழை பொழியும் கிராமங்கள் செழிக்கும் என்பது ஐதீகம். இதன்படி, செவ்வாய்க்கிழமை இரவு கோயிலில் இருந்து புறப்பட்ட அம்மன், புதன்கிழமை  சிக்கரசம்பாளையத்தில் எழுந்தருளி  பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 
6ஆம் தேதி வெள்ளியம்பாளையம், கொத்தமங்கலம், 7ஆம் தேதி புதூர், அக்கரை தத்தப்பள்ளி, 8ஆம் தேதி உத்தண்டியூர்,அய்யன்சாலை தாண்டாம்பாளையம், கெஞ்சனூர், 9,10ஆம் தேதிகளில் சத்தியமங்கலத்திலும் வீதி உலா நிகழ்ச்சிக்கு பின் செளடேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மன் தங்க வைக்கப்படும்.
11ஆம் புதுவடவள்ளி,புதுகுய்யனூர்,ராஜன்நகர் ஆகிய கிராமங்களில் அம்மன் வீதிஉலா நிறைவுக்கு பின்னர் அம்மன் விக்கிரகங்கள் கோவிலை வந்தடையும். அன்றிரவு கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும்.
மார்ச்.12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை கோயிலில் தினந்தோறும் நித்தியப்படி பூஜையும் இரவு பீனாட்சி வாத்தியத்துடன் அம்மன் புகழ் பாடும் களியாட்டம் நடைபெறும்.
மார்ச் 17ஆம் தேதி திங்கள்கிழமை  இரவு அம்மன் அழைப்பு மற்றும் குண்டம் விழாவும் அதனைத் தொடர்ந்து 18ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை பக்தர்கள் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெறும். 19ம் தேதி மாவிளக்கு, இரவு புஷ்பரத நிகழ்ச்சியில் சிம்ம வாகனத்தில் அம்மன் வீதியுலா காட்சியளிப்பார். 20ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா மற்றும் அன்னதானம், 21ம் தேதி திருவிளக்குப்பூஜை மற்றும் தங்கத்தேர் புறப்பாடும் மார்ச் 24ம் தேதி மறுபூஜை விழாவும் நடைபெற உள்ளது